Main Menu

குடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து – மதுவை ஒழிக்க வினோத தண்டனை

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அமிர்காத் தாலுகாவில் பழங்குடியின மக்கள் வசிக்கும் காதிசிதாரா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ளவர்கள் பலர் மது பழக்கத்துக்கு அடிமையானார்கள். இதனால் அடிக்கடி இருதரப்பினருக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. சில நேரங்களில் கொடூர கொலைகளும் நடந்தன.

மதுபோதையில் வந்தால் அபராதம்

இதையடுத்து 2013-ம் ஆண்டு கிராம பெரியவர்கள் கூடி மதுபோதையில் கிராமத்திற்குள் வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தனர். அதன்படி கிராமத்திற்குள் மதுபோதையில் யாராவது வந்தால் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மதுபோதையில் மோதலை உருவாக்கினால் அவரிடம் அபராதமாக ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

மேலும் அவர் 800 பேர் கொண்ட இந்த கிராமத்திற்கு ஆட்டுக்கறி விருந்து வைக்க வேண்டும் என்ற வினோத தண்டனை விதிக்கப்பட்டது. ஆட்டுக்கறி விருந்துக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகும்.

இது குறித்து கிராமவாசிகள் கூறுகையில், ‘தற்போது கிராமத்தில் யாரும் மது அருந்துவதில்லை. தகராறும் நடைபெறுவதில்லை. ஆரம்ப காலத்தில் 3 முதல் 4 பேர் பிடிபட்டனர். கடந்த ஆண்டில் ஒருவர் மட்டுமே சிக்கினார். இந்த ஆண்டில் இதுவரை யாரும் மதுபோதையில் பிடிபடவில்லை’ என்றனர்.

வினோத தண்டனையால் தற்போது காதிசிதாரா கிராமம் மது ஒழிப்பில் சாதித்துள்ளது.

பகிரவும்...