Main Menu

கிளிநொச்சி ஆடைத் தொழிற் சாலைகளில் கொரோனா பரவினால் மாவட்டத்தையே அழித்து விடும்!உடனடியாக மூடி மாவட்ட மக்களைக் காப்பாற்றுமாறு அவசர கோரிக்கை

கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவினால் மாவட்ட மக்கள் பேராபத்தை எதிர்கொண்டு மாவட்டமே அழிந்துவிடும் என பொது அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில், உடனடியாக குறித்த ஆடைத் தொழிற்சாலைகளை மூடி மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நடவடிக்கை எடுக்காமல் ஏற்படும் பாரிய இழப்புக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரும் சுகாதார ஊழியர்களுமே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் சார்பில் ஊடக சந்திப்பொன்று இ்ன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி ஊடக மையத்தில் நடைபெற்றது.

இதன்போது, பொது அமைப்புக்கள் சார்பில், கரைச்சி மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர் கருப்பையா ஜெயக்குமார் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “நேற்றைய முடிவுகளின் படி புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் 310 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவ்வாறு குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணும்வரை அந்த நிர்வாகம் சரியாகக் கையாளவில்லை. அவர்களுக்காக பி.சி.ஆர். உள்ளிட்ட விடயங்களை சரியான முறையில் கையாண்டிருந்தால் இவ்வளவு பெருந்தொகையான தொற்றாளர்கள் அடையாளம் கண்டிருக்கமாட்டார்கள்.

குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதற்குக் காரணம் அந்த நிர்வாகமேயாகும். பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு குறித்த ஆடைத் தொழிற்சாலை நிறுவனம் பெருந்தொகையான நட்ட ஈட்டினை வழங்க வேண்டும்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றார்கள்.

குறித்த ஆடைத் தொழிற்சாலைகள் இரண்டிலும், புதுக்குடியிருபில் இருக்கின்ற ஆடைத்தொழிற்சாலை போன்று தொற்று பரவுமானால் கிளிநொச்சி கடுமையான பாதிப்புக்குள்ளாகும். ஆகவே, இதனை சாதாரணமான விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இவ்வாறான ஆபத்தான நிலையைத் தடுப்பதற்கு இங்குள்ள சுகாதாரத் துறையினருக்கும், மாவட்ட அரசாங்க அதிபருக்கும் முக்கிய பொறுப்புள்ளது.ஷ

அண்மையில் மூன்று நாட்கள் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த போதும் ஆடைத் தொழிற்சாலை இயங்கியதாகவே அறியக் கிடைக்கின்றது.

இந்த ஆடைத் தொழிற்சாலைகளில் அபாயகரமான தொற்று உருவாகுமாக இருந்தால் அது எமது மாவட்டத்தையே அழித்துவிடும்.

தொற்று வருமுன்னே எமது மாவட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் அல்லது சொற்பமாக வந்ததை அடியோடு அழிக்க வேண்டுமென்றால் உடனடியாக கிளிநொச்சியில் இருக்கின்ற இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளையும் மூட வேண்டும்.

இதேவேளை நீண்ட காலமாக பணியாளர்களாக இருந்த அவர்களுக்கு சம்பளத்துடனான விடுமுறையை குறித்த ஆடைத்தொழிற்சாலைகள் வழங்க வேண்டும்.

இதனைவிட, அனைத்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மாவட்டத்தில் எவ்வாறான தொற்றுநிலை காணப்படுகின்றது என்பதை அறிய முடியும்.

அவ்வாறு இல்லாது அசமந்தப் போக்காக இருந்தால் மாவட்டத்திற்கு பாரிய அழிவு ஏற்படும்.

மாவட்டத்தில் தொற்று அபாய நிலை முழுமையாக நீங்கும்வரை குறித்த இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூட வேண்டும் என்பது இன்றைய முக்கிய நிலையாகும்.

இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறையினரும் அரசாங்க அதிபரும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

ஏற்கனவே எமது இனத்தின் ஒரு பகுதியை இழந்து நிற்கின்றோம். இந்நிலையில், கொவிட் தொற்று பரவலினால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டால் கணிசமான தமிழர்கள் இல்லாது போகும் நிலை காணப்படுகின்றது” என அவர் பொது அமைப்புக்கள் சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பகிரவும்...