Main Menu

காஷ்மீரில் அடுத்த அதிரடி மாற்றம்: அலுவல் மொழிகள் ஐந்தாக அதிகரித்து அமைச்சரவை ஒப்புதல்!

காஷ்மீரில் அடுத்த அதிரடி மாற்றமாக உருது, டோக்ரி, காஷ்மீரி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என 5 மொழிகளுக்கு மாநிலத்தின் அலுவல் மொழியாக அங்கீகரித்து மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரமான 370ஆம் பிரிவு கடந்த ஆண்டு ஓகஸ்ட் 5ஆம் திகதி இரத்துச் செய்யப்பட்டது.

அதன்பின்னர் அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் மாநிலத்தின் அலுவல் மொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரில் தற்போது உருது மற்றும் காஷ்மீரி ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே அலுவல் மொழிகளாக உள்ளன. பிற மாநிலங்களைச் சேர்ந்த வால்மீகி உள்ளிட்ட சமூகத்தினர் காஷ்மீரில் குடியேற ஒப்புதல் அளித்து அண்மையில் சட்டம் கொண்டு வரப்பட்டதன் தொடர்ச்சியாக அடுத்த பெரிய நடவடிக்கையாக அலுவல் மொழிகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,

“ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழிச் சட்டம் 2020இற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...