Main Menu

காற்றின் வேகம் அதிகரிக்கும் – மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100-150 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ.க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பகிரவும்...