Main Menu

காணொளி மூலம் அவுஸ்ரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்தினார் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று(வியாழக்கிழமை) பிரதமர் ஸ்கொட் மொரிசனுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்திய – அவுஸ்ரேலிய பிரதமர்கள் இடையே மெய்நிகர் இருதரப்பு உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. இதில், இந்திய பிரதமர் மோடியும் அவுஸ்லேிய பிரதமர் ஸ்கொட் மொரிசனும் காணொளி வாயிலாக பங்கேற்று இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்திய பிரதமர் மோடி பேசும்போது, கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்த பின்னர், அவுஸ்ரேலிய பிரதமர் குடும்பத்தினருடன் இந்தியா வரவேண்டும் எனறு கேட்டுக்கொண்டார்.

‘கொரோனா வைரஸ் உலகின் ஒவ்வொரு பகுதியையும் பாதித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய மக்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையில் இருந்து விடுபட இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை இந்தியா வாய்ப்பாக பார்க்க தொடங்கிவிட்டது.

இந்திய – அவுஸ்ரேலிய உறவு விரிவடைந்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையிலான உறவு உலகிற்கு நன்மை பயப்பதாகவும் உள்ளது’ என்றும் மோடி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுத் தலைவருடன் இருதரப்பு மெய்நிகர் உச்சிமாநாட்டை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்ரேலிய பிரதமர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாததால் மெய்நிகர் உச்சி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த நிகழ்வானது, அவுஸ்ரேலியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதை குறிப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...