Main Menu

கடைசி நேரத்தில் அமெரிக்க பயணத்தை ரத்து செய்த மைத்திரிபால சிறிசேன

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம், கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா பொதுச்சபையின் 74 ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதம், செப்ரெம்பர் 24ஆம் நாள் ஆரம்பித்தது. இந்த விவாதம் நாளையுடன் முடிவடைகிறது.

இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார். அதற்கான ஒழுங்குகளை அதிபர் செயலகம் மேற்கொண்டிருந்தது.

கடைசி நேரத்திலேயே, சிறிலங்கா அதிபரின் பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு, சிறிலங்கா குழுவுக்கு வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில் இருந்து சிறிலங்கா அதிபர் விலகிக் கொண்டதற்கான காரணம் தெரிவிக்கப்படல்லை.

எனினும், நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்களைக் கருத்தில் கொண்டே, அமெரிக்க பயணத்தை மைத்திரிபால சிறிசேன கடைசி நேரத்தில் ரத்துச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால், நாட்டின் மிக முக்கியமான அரசியல் நகர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அவரால் நாட்டில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

அதேவேளை இம்முறை ஐ.நா பொதுச்சபைக் சுட்டத்தொடரில், சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹூ, வெனிசுவேலா  அதிபர் நிகொலஸ் மதுரோ உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...