Main Menu

கடல்நீர் மட்டம் உயர்வதால் சென்னை, மும்பைக்கு ஆபத்து- நிபுணர்கள் குழு ஆய்வில் தகவல்

கடல்நீர் மட்டம் உயர்வதால் சென்னை, மும்பைக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று நிபுணர்கள் குழு ஆய்வில் தெரியவந்துள்ளது.

தீயினால் எரிக்கப்படும் பொருட்களினால் கார்பன்-டை-ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற வாயுக்கள் உருவாகி உலக வெப்பமயமாதலை அதிகரித்து வருகிறது.

இதனால் பருவ நிலைகள் மாற்றம் ஏற்பட்டு பல இடங்களில் இயல்புக்கு மாறாக அதிக மழை கொட்டுகிறது. சில இடங்களில் மழையே பெய்வது இல்லை.

மேலும் பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் கடற்கரை பகுதிகள் அரிக்கப்படுவதுடன் ஊருக்குள்ளும் கடல்நீர் புகுகிறது.

இந்த நிலையில் பருவநிலை மாற்றம் தொடர்பான உலக நாடுகளின் அரசு சார்பு குழு கடல் மற்றும் பனிப்பாறை தொடர்பாக ஒரு சிறப்பு ஆய்வு அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வெளியிட்ட 7 ஆயிரம் கட்டுரைகளை மையமாக வைத்து இந்த ஆய்வறிக்கையை தயாரித்து உள்ளனர். உலகம் முழுவதும் 36 நாடுகளை சேர்ந்த 100 விஞ்ஞானிகள் ஆய்வு செய்து இந்த அறிக்கையை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த ஆய்வு அறிக்கை மனாக்கா நாட்டில் வெளியிடப்பட்டது. அதில் 2100-ம் ஆண்டு வாக்கில் உலக வெப்பமயம் நாம் எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இன்றைய நிலையை விட வெப்பம் அதிகரிப்பு 2 மடங்கு வரை உயரலாம் என்று கூறப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால் பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

வெப்ப நிலை அதிகரிப்பை 2 டிகிரிக்கு கீழ் கட்டுப்படுத்தி வைத்தால் 2100-ம் ஆண்டு வாக்கில் 30-லிருந்து 60 செ.மீ. வரை கடல்மட்டம் உயரும். ஆனால் இப்போதைய வெப்பநிலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து இதே நிலையில் நீடித்தால் 60-லிருந்து 110 செ.மீ. வரை கடல் மட்டம் உயரும் என்றும் அதில் கூறியுள்ளனர்.

ஏற்கனவே 20-ம் நூற்றாண்டில் 15 செ.மீ. அளவிற்கு கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அது இனி 2 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது இனி ஒவ்வொரு வருடமும் 3.6 மீ.மீ. அளவுக்கு கடல்நீர் மட்டம் அதிகரிக்கும்.

இவ்வாறு வெப்பநிலை அதிகரிக்கும்போது 2 வகையான பாதிப்புகளை பூமி சந்திக்க வேண்டியது வரும். அதாவது கடல்நீர் மட்டம் உயரும்போது, கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு கடற்கரை நகரங்கள், துறைமுகங்கள் பாதிக்கப்படும்.

கோப்புப்படம்

அதுமட்டுமல்லாமல் கடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, அதிக கடல்நீர் ஆவியாகி மேலே செல்லும். அது மழையாக பொழியும்போது, பெரும் வெள்ளம் ஏற்பட்டும் பாதிப்பு ஏற்படும்.

இந்தியா போன்ற கடல் சூழ்ந்துள்ள நாடுகள், தீவு கூட்டங்கள் இதில் கடுமையாக பாதிக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதும் 45 துறைமுக நகரங்கள் கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதில் 4 துறைமுக நகரங்கள் இந்தியாவில் உள்ளன. அதாவது சென்னை, மும்பை, கொல்கத்தா, சூரத் ஆகிய 4 நகரங்கள் பாதிக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த துறைமுக நகரங்களில் 50 செ.மீ. அளவிற்கு கடல்மட்டம் உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடும் மழை காரணமாக இந்த நகரங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகள் முற்றிலும் மூழ்கி விடும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில கடலோர பகுதியும் கடுமையான பாதிப்பை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கையில் கூறியுள்ளனர்.

இதேபோல மாலத்தீவு நாடும் முற்றிலும் மூழ்கிவிடும் என்று அதில் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரமும் அழியும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்நீர்மட்டம் உயர்வதால் 2100-ம் ஆண்டில் சுமார் 140 கோடி மக்கள் உலக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல பனிப்பாறை உருகுவதால் இமயமலை பகுதியில் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.

இமயமலை இந்துகுஸ் பகுதியில் 24 கோடி மக்கள் வசித்து வருகிறார்கள். பனிப்பாறை உருகுவதால் போதிய நீர் இல்லாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் இந்த மக்கள் பாதிக்கக்கூடும் என்றும் இந்த அறிக்கையை தயாரித்த ஆசிரியர்களில் ஒருவரான அஞ்சல்பிரகாஷ் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது உலகில் உள்ள பனிப்பாறையில் 36-லிருந்து 64 சதவீதம் வரை அழியும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கடல்மட்டம் 50 செ.மீ. அளவிற்கு உயரும்போது, 45 நகரங்கள் அழியும் நிலை ஏற்படும். சுமார் 5 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் வெப்பமயமாதல் அதிகரிப்பால் பலவகை கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும். இதனால் கடல் உணவுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பகிரவும்...