Main Menu

ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் பதவியை தொடர சீனா ஆதரவு!

ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் பதவியில் இரண்டாவது முறையாக அன்டோனியோ குட்டெரெஸ் வகிப்பதற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய சீன வெளியுறவுத் துறை ஹூவா சன்யிங் கூறுகையில், ‘ஐ.நா. தலைமைப் பொறுப்பை அன்டோனியோ குட்டெரெஸ் ஏற்றதிலிருந்து, உலக அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அந்தப் பதவியை வகிப்பதற்குத் தகுதியானவர் என்று சீனா கருதுகிறது’ என கூறினார்.

முன்னதாக, ஐ.நா. தலைமைப் பொறுப்புக்கு மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்பம் குறித்து பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸிடம் ஐ.நா. பொதுச் சபை தலைவர் வோல்கான் போஸ்கிர் அந்த மாதத் தொடக்கத்தில் விளக்கம் கேட்டார்.

அதற்கு, மேலும் 5 ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பதற்கான தனது விருப்பத்தை குட்டெரெஸ் தெரிவித்தார். பாதுகாப்பு சபையில் தலைவருக்கும் குட்டெரெஸ் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் ஐ.நா. பொதுச் செயலராக பொறுப்பு வகித்து வரும் குட்டெரெஸின் பதவிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

பகிரவும்...