Main Menu

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு – போரிஸ் ஜான்சன்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து  விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்து பாராளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது.
அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்கு உள்ளாக பிரெக்சிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இல்லையெனில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.

இதற்கிடையே, பிரெக்சிட் உடன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போரிஸ் ஜான்சனின் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் தங்களது பதவியில் இருந்து விலகினர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இதுதொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கட்டுப்பாட்டை திரும்பப் பெறும் ஒரு புதிய ஒப்பந்தம் எங்களுக்கு கிடைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தத்தின் சட்ட உரையில் செயல்பட்டு வருகின்றனர், ஆனால் அதற்கு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றங்களின் ஒப்புதல் தேவைப்படும்.இதை தொடர்ந்து இங்கிலாந்து நாடாளுமன்றம் விரைவில் கூட உள்ளது.
பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக நீண்ட காலமாக இழுபறி நீடித்த நிலையில், பிரசல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடந்த பேச்சில் தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பகிரவும்...