Main Menu

எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப் பட்டாலும் போராட்டம் தொடரும் – உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள உறவுகள்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் நீதியைப் பெற்றுக் கொடுக்கும் வரையில் எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் தமது போராட்டம் தொடரும் என மட்டக்களப்பில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டுவருவோர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இடம்பெற்றுவரும் சர்வதேச நீதிகோரிய சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் பல்வேறு தடைகளையும் கடந்து இன்று (செவ்வாய்க்கிழமை) 14வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்யை தினம் குறித்த பகுதியில் போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸார் முற்பட்ட நிலையில், போராட்டம் நடாத்தியவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியமையினால் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், இன்றைய தினமும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு தலைமையக பொலிஸார், அருட்தந்தை ஜோசப்மேரி, அருட்தந்தை ஜெகதாஸ் ஆகியோருக்கு இன்று தடையுத்தரவினை வழங்க முற்பட்ட நிலையில், அவர்கள் போராட்ட இடத்தில் இல்லாத காரணத்தினால் பொலிஸார் தடையுத்தரவினை வாசித்துவிட்டு திரும்பிச்சென்றனர்.

தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் தமக்கு விடுக்கப்பட்ட நிலையிலும் தாங்கள் தொடர்ச்சியாக இந்த போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வோம் என சமூக செயற்பாட்டாளரும் மகளிர் அமைப்புகளின் முக்கியஸ்தருமான திருமதி ரஜனி பிரகாஸ் இதன்போது தெரிவித்தார்.

பகிரவும்...