Main Menu

எல்லை பிரச்சினையைத் தீா்க்க 5 அம்சத் திட்டம் – இந்தியா சீனா ஒப்புதல்

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவி வரும் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்காக 5 அம்ச திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன.

அதில், எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இருதரப்புப் படைகளை திரும்பப் பெறுவது, பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 4 மாதங்களுக்கு மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், ரஷிய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அங்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யை சந்தித்து லடாக் விவகாரம் குறித்துப் பேசினார்.

மேலும் இந்தியா-சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளின் தலைவர்களிடையே ஏற்கெனவே நடைபெற்ற பேச்சுவாா்த்தைகளின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை அமுல்படுத்துவதற்கு வெளியுறவு அமைச்சர்கள் இருவரும் உறுதியேற்றனர்.

இரு நாடுகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், நல்லுறவில் எந்தவொரு விரிசலையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்று இரு தரப்பு அதிகாரிகளும் தெரிவித்ததுடன் இந்திய-சீன எல்லைப் பிரச்னை தொடா்பாக ஏற்கெனவே கையெழுத்தான ஒப்பந்தங்களை முறையாகக் கடைப்பிடிக்க அவர்கள் உறுதியளித்தனர்.

மேலும் எல்லைப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, அங்கு அமைதியை நிலைநாட்டச் செய்வதற்கு தலைவா்கள் ஒப்புக் கொண்டதுடன் இரு நாடுகளும் தங்களுக்குள் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

அந்தப் பேச்சுவாா்த்தையின்போது, லடாக் எல்லைப் பகுதியில் சீனா அதிக அளவிலான படைகளைக் குவித்துள்ளது தொடா்பாக இந்திய தரப்பு அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு சீனத் தரப்பில் போதுமான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...