Main Menu

எதிர்காலத்தில் தேர்தல்கள் வணிக ரீதியாக மாற்றமடையும் அபாயம்- உமாச்சந்திரா பிரகாஸ்

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் இரட்டைப் பிரஜாவுரிமைகள் கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையானது, எதிர்காலத்தில் தேர்தல்கள் வணிக ரீதியாக மாற்றமடையும் அபாயம் உள்ளதாக முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக ஆதவனுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “தற்போதுள்ள அரசாங்கம் 19ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச்செய்து 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான வரைபைத் தயாரித்துள்ளது. எனவே, இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்றவகையில் இந்த புதிய திருத்தத்தை எதிர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டில் குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது முக்கியமானது. அதேபோன்று ஜனாதிபதி ஆறு மாதங்களில் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதனைவிட, இலங்கையில் ஆணைக்குழுக்களின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவும் முழுமையான அங்கீகாரமோ அல்லது அதிகாரமோ இல்லாதவாறே செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

அத்துடன், எதிர்காலத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்ற கருத்து சொல்லப்பட்டுள்ளது.

எனவே, எதிர்காலத்தில் தேர்தல் என்பது புலம்பெயர் நாடுகளில் இருக்கக் கூடிய சிங்கள, தமிழ் மக்களுடைய ஒரு வணிக ரீதியான தேர்தலாக மாற்றமடையக் கூடிய அபாயம் இருக்கிறது. இதனால், இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு 20ஆவது திருத்தத்தை எதிர்க்கின்றோம்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவருடைய கூட்டணியில் இருக்கக் கூடிய சிவில் அமைப்புக்கள், ஒன்றிணைந்த கட்சிகள், பொது அமைப்புக்களை ஒன்றுதிரட்டி 20ஆவது திருத்தத்தை தோற்கடிப்பதற்கான முயற்சிகளை எதிர்க்கட்சித் தலைவர் மேற்கொண்டு வருகிறார்” என்று குறிப்பிட்டார்.