Main Menu

உலகக்கோப்பை கிரிக்கெட் -வங்காள தேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

இந்தியா – வங்காள தேச அணிகள் மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.


ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆரம்பம் முதலே வங்காள தேசத்தின் பந்துவீச்சை இருவரும் வெளுத்து வாங்கினர்.

உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா 4வது சதமடித்து அசத்தினார். அவர் 92 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து அரை சதமடித்து ஆடிய லோகேஷ் ராகுல் 77 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ரிஷப் பந்த் 48 ரன்னில் வெளியேறினார். இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 314 ரன்களை எடுத்துள்ளது. 
வங்காள தேசம் சார்பில் முஷ்டாபிஜுர் ரஹ்மான் 5 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன், ருபெல் உசேன், சவுமியா சர்க்கார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

5 விக்கெட் வீழ்த்திய முஷ்டாபிஜுர் ரஹ்மான்

இதைத்தொடர்ந்து, 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், சவுமியா சர்க்காரும் ஆடினர்.
தமிம் இக்பால் 22 ரன்னிலும், சவுமியா சர்க்கா 33 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 24 ரன்னிலும், லிட்டன் தாஸ் 22 ரன்னிலும், மொசாடாக் ஹுசேன் 3 ரன்னிலும் அவுட்டாகினர்.


ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ஷகிப் அல் ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து அசத்தினார். அவர் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.


இறுதியில், முகமது ஷைபுதின் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனாலும், வங்காள தேசம் 50 ஓவரில் 286 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து, இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், உலகக்கோப்பை அரை இறுதி சுற்றுக்கும் முன்னேறியது.


இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டும், ஷமி, சாஹல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பகிரவும்...