Main Menu

உக்ரைன் போருக்கு அமெரிக்காவே மூல காரணம்- வட கொரியா குற்றச்சாட்டு

அமைதியை நிலைநிறுத்த முயற்சிப்பதாக கூறி, மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக வட கொரியா குற்றம்சாட்டி உள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை இப்போது இல்லை. இரு நாடுகளும் அவர்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ரஷியா-உக்ரைன் போர் தொடர்பாக வடகொரியா முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தனது கருத்தை வெளியிட்டுள்ளது. அதில், ரஷியா தொடுத்துள்ள போருக்கு அமெரிக்காவே மூல காரணம்  என்று வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து வட கொரியா வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை வடகொரிய ஆராய்ச்சியாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
அமெரிக்கா, ரஷியாவின் பாதுகாப்பிற்கான நியாயமான கோரிக்கையை புறக்கணித்து ராணுவ மேலாதிக்கத்தை பின்பற்றுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கு அமெரிக்காவே மூல காரணம். உக்ரைன்  விவகாரத்தில் அமெரிக்கா இரண்டு நிலைப்பாட்டை  கொண்டுள்ளது. அமைதியை நிலைநிறுத்த முயற்சிப்பதாக கூறி, மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது. 
அது மட்டுமின்றி மற்ற நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகளை எந்த காரணமும் இல்லாமல் கண்டிக்கிறது. அமெரிக்கா உலகத்தை ஆட்சி செய்த காலம் போய்விட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகிரவும்...