Main Menu

ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் – முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அங்கு முன்னிலையாகியுள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் பல இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, 500 இற்கும் மேட்பட்டோர் காயமடைந்தனர்.

இதனையடுத்து கடந்த நல்லாட்சி அரசாங்தின்போது இந்த தாக்குதல் குறித்து ஆராய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. குறித்த ஆணைக்குழுவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், புலனாய்வு அதிகாரிகள் என பலர் சாட்சியம் வழங்கினர்.

விசாரணையின்போது, இந்த தாக்குதல் குறித்து ஏற்கனவே புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் இந்த விடயம் தொடர்பாக ரணில்- மைத்திரி அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்கவில்லையென பலர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் முன்னிலையாகிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ,  ஐ.எஸ் அமைப்பில் இணைந்துகொண்டவர்களுக்கு எதிராக எந்த உடனடி நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக  குறிப்பிட்டார்

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக தனது பிரத்தியேக செயலாளர் சமீர டி சில்வா மூலம் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, ஹேமசிறி பெர்னாண்டோ கூறிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் நாட்களில் முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் ஹேமசிறி பெர்னாண்டோவினுடைய கருத்துக்களின் உண்மை தன்மையை அதன்போது அவர் தெளிவுபடுத்துவார் என சமீர டி சில்வா  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...