Main Menu

இலங்கை வரவுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி: போட்டி அட்டவணை வெளியீடு!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ரி-20 போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 03ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ள நியூஸிலாந்து அணி, சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக கட்டுநாயக்கவில் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியொன்றில் விளையாடவுள்ளது.

இந்த பயிற்சிப் போட்டியின் பின்னர், இலங்கை அணியுடன் நியூஸிலாந்து அணி விளையாடும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகின்றது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக அமையவுள்ள இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனை அடுத்து டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி கொழும்பு. சரவணமுத்து மைதானத்தில் ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

டெஸ்ட் தொடரின் பின்னர் நியூசிலாந்து அணி, ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி கட்டுநாயக்க மைதானத்தில் ரி-20 பயிற்சிப் போட்டி ஒன்றில் விளையாடவுள்ளது.

இந்த போட்டியினை அடுத்து இலங்கை அணியுடன் நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடவுள்ளது.

இந்த ரி-20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதியிலும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதியிலும் கொழும்பு ஆர். பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இத் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் செப்டம்பர் மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த பின்னர், இத்தொடரில் விளையாடும் இரு அணிகளின் விபரங்களும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பகிரவும்...