Main Menu

இலங்கையில் 54 வீதமானவர்களே கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த தயார் – ஆய்வில் தகவல்

இலங்கையில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தினைப் பயன்படுத்துவதற்கு 54 வீதமானவர்களே தயாராக இருப்பதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தின் ஆராய்ச்சி பிரிவு மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்போதே இந்த விடயம் தொடர்பாக தெரியவந்துள்ளது.

அதன்படி, 38 வீதமானவர்கள் தாங்கள் உறுதியாக எதனையும் தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர் என்பதோடு, 8 வீதமானவர்கள் தாங்கள் மருந்தினை பயன்படுத்தப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

மருந்தினை பயன்படுத்துவது குறித்து 34 வீதமான ஆண்களும் 40 வீதமான பெண்களும் நிச்சயமற்ற நிலையில் உள்ளதும் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த 55 வீதமானவர்கள் தாங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பயன்படுத்துவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, 50 வீதமான தமிழர்களும் 59 வீதமான முஸ்லிம்களும் தாங்கள் தடுப்பு மருந்தினைப் பயன்படுத்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளமையும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுகாதார பணியாளர்களில் 57 வீதமானவர்கள் தாங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பயன்படுத்த தயார் என தெரிவித்துள்ளஅதேநேரம், 37 வீதமானவர்கள் தாங்கள் நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, பெரும்பாலான மக்கள் மருந்தின் வகை பக்கவிளைவுகள் குறித்து கவலை வெளியிட்டுள்ளனர் என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பகிரவும்...