Main Menu

இரண்டாவது வைரஸ் அலைக்கு பிரித்தானியா தயாராக வேண்டும் – சுகாதார அதிகாரிகள்

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளின் “உண்மையான ஆபத்து” க்கு பிரித்தானியா தயார் நிலையில் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க ஆய்வினை மேற்கொள்ளுமாறு சுகாதார துறைசார் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் உயிரிழப்பைத் தடுக்க அவசர நடவடிக்கை தேவைப்படும் என அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வெளியான கடிதம் ஒன்றினை பிரித்தானிய மருத்துவ சஞ்சிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

நேற்றயைதினம் முடக்கநிலையில் தரளவுகளை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்திருந்த பின்னணியில் குறித்த கடிதம் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் தொற்றுநோயின் எதிர்கால வடிவத்தை கணிப்பது கடினம் என்றாலும், கிடைக்கக்கூடிய சான்றுகள் நாட்டில் அதிகளவில் பாதிப்பு இருப்பதாகவும், இரண்டாவது அலை உண்மையான அபாயமாகவும் இருப்பதைக் குறிக்கிறது என குறித்த கடிதத்தில் சுகாதார துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பிரித்தானியாவும் பாதிப்புக்கு இலக்காகியிருந்த நிலையில், இங்கிலாந்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டுகள் எதிர்வரும் ஜூலை மாதம் 04ம் திகதி முதல் தளர்த்தப்படவுள்ளதாக பிரதமர் நேற்று அறிவித்திருந்தார்.

இவ்வாறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை தொடர்ந்து முடக்க காலத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த களியாட்ட விடுதிகள், உணவகங்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் மீளத் திறக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது.

அத்தோடு வாய்ப்புள்ள இடங்களில் மக்கள் இரண்டு மீட்டர்கள் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை ஒருமீட்டருக்கும் அதிகமான தனிமனித இடைவெளியை பேணும் புதிய விதிமுறை அமுல்படுத்தப்படும் எனவும் பிரதமர் அறிவித்திருந்தார்.

ஆனால் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டெர்ஜன் மற்றும் வேல்ஸ் முதலமைச்சர் மார்க் டிராஃபோர்ட், 2 மீட்டர்கள் விதிமுறையானது தமது பிராந்தியங்கள் மேலும் சில காலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...