Main Menu

இரட்டை குடியுரிமையுடைய ஒருவர் மக்கள் பிரதிநிதியாக வர வேண்டுமா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் – கெஹெலிய!

இரட்டை குடியுரிமையுடைய ஒருவர் மக்கள் பிரதிநிதியாக வர வேண்டுமா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ’20தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள பல விடயங்கள் குறித்து நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.

அதற்கமைய தற்போது உங்களால் கேட்கப்பட்ட மிக முக்கியமானதொன்றாகும். யாருடைய தேவைக்காக இவ்வாறானதொரு ஏற்பாடு உள்வாங்கப்பட்டது என்ற கேள்விக்கு பதிலாக யாருடைய தேவைக்காக அந்த ஏற்பாடு 19 ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்டது என்று கேட்க வேண்டும்.

1978 ஆம் ஆண்டு முதல் இவ்விடயம் பற்றிய ஏற்பாடு அரசியலமைப்பில் இருக்கவில்லை. ஆனால் 19 இல் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் ஒரு குழுவை மையப்படுத்தியதாகவே உள்ளன.

1978 முதல் 19 ஆவது திருத்தம் உருவாக்கப்படும் வரை இவ்வாறானதொரு பிரச்சினை நாட்டில் காணப்படவில்லை. குறித்த காலப்பகுதிக்குள் இரட்டை குடியுரிமையுடைய பலர் இருந்தனர்.

19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது எமது தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினரொருவருக்கு இதனால் பிரச்சினை ஏற்பட்டது. அவர் எழுத்துமூலம் அதனை நீக்குமாறு கோரியும் நீக்கப்படவில்லை. அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் என்ன தீர்மானம் எடுப்பது ?

இரட்டை குடியுரிமையுடைய ஒருவர் மக்கள் பிரதிநிதியாக வர வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். இது சர்வசன வாக்கெடுப்புக்கு இணையானதொன்றாகும்.

இந்நிலையில் முழுமையாக புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். அதில் இவ்விடயம் குறித்தும் அவதானம் செலுத்தப்படும்“ எனக்குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...