Main Menu

இனவாத சிந்தனையுடைய வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்- சுமனரட்ன தேரர்

இனவாத சிந்தனையுடன் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை இனங்கண்டு, மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரட்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அம்பிட்டிய சுமனரட்ன தேரர்  மேலும் தெரிவித்துள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிக்க நீர் கூட இல்லாமல் சில குடும்பங்கள் காணப்படுகின்றன.

எனினும், இதுதொடர்பாக எல்லாம் அக்கரைக் கொள்ளாமல் இருக்கும் அரசியல்வாதிகள், இனவாதத்தையும் மதவாதத்தையுமே மக்கள் மனங்களில் விதைத்து வருகிறார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளால் எந்தக் காலத்திலும் மக்களின் உரிமையை வென்றெடுக்க முடியாது.

இனவாதத்தை தோற்றுவிக்கும் முகமாக பிரபாகரனை காட்டி வாக்குகேட்டு நாடாளுமன்றம் சென்ற உறுப்பினர்கள், மக்களுக்காக செய்தது என்ன என்று கேட்க விரும்புகிறேன்.

வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஒரு நேரத்தில் தன்னை ஜனநாயகவாதியாகும் இன்னொரு நேரத்தில் தன்னை ஒரு அடிப்படைவாதியாகவும் தான் காண்பிக்கிறார்.

இவ்வாறானவர்கள் நாடாளுமன்றம் சென்று மக்களின் உரிமையை எவ்வாறு பெற்றுக் கொடுப்பார்கள். இதனை மக்கள் சிந்திக்க வேண்டும்.

எனவே இத்தகைய அரசியல்வாதிகளை இனங்கண்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...