Main Menu

இனவழிப்பு நடை பெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதாது- சுமந்திரன் சுட்டிக்காட்டு!

இலங்கையில் இனவழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் நீதிமன்றப் பொறிமுறைக்குள் நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றபோதுதான் அதனை நாங்கள் கோரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனவே, சாட்சிங்கள் போதாமல் இருக்கின்றபோது, எமது எதிர்பார்ப்புக்கு விரும்பத்தகாத பதிலே வந்துசேரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “நாங்கள் சர்வதேசத்திடமே இன்று நீதிகோரி நிற்கின்றோம். சர்வதேசத்தின் அறிக்கைகளை நாங்கள் சாதகமாகவே பாவிக்கின்றோம். இந்த அறிக்கைகளுக்கு எதிராக யாரும் கருத்துகளைத் தெரிவித்ததாக நான் அறியவில்லை. இரு தரப்பினரும் போர்க்குற்றம் செய்தார்கள் என்று நிபுணர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாங்கள் சொல்வதையே அங்கிருந்து சொல்லவேண்டும் என்பதை யாரும் சர்வதேசத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது. அனைத்துப் பக்கங்களையும் விசாரணைசெய்து சரியான தீர்மானங்களையே அவர்கள் எடுப்பார்கள்.

வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றியது இனவழிப்புத் தீர்மானம் என்று நாங்கள் கூறினாலும் அதன் இறுதியில் ‘கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு’ என்று சொல்லப்பட்டுள்ளது.

அவ்வாறானதொரு சர்வதேச குற்றம் இல்லை. ‘கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு’ என்பது இன்னும் சர்வதேச குற்றங்களில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றுதான் அந்தத் தீர்மானம் முடிவுறுகின்றது. இதனையே நாம் இனவழிப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம் என தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி வருகின்றோம்.

எனினும், விக்னேஸ்வரன் ஜயா வட மாகாண சபையில் நிறைவேற்றியதை வைத்து இனிவரும் காலங்களில் சர்வதேச குற்றங்களில் இதனைச் சேர்த்துக்கொள்வார்களோ தெரியாது.

தமிழ் மக்களுக்கு நாங்கள் பாரிய எதிர்பார்ப்பினைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு வழங்கி அவர்களுக்குக் கிடைக்காததன் காரணமாகவே விரக்தி நிலையில் உள்ளனர்.

நாங்கள் உண்மை நிலையினைச் சொன்னால் இவர் அரசாங்கத்திற்காகப் பேசுகின்றார் என்பார்கள். நாங்கள் அரசாங்கத்திற்காக பேசவில்லை. உண்மையைச் சொல்வது ஒருபோதும் துரோகச்செயல் இல்லை.

இதேவேளை, ஐ.நா.வில். கொண்டவரப்பட்டது இலங்கைக்கு எதிரான தீர்மானம் இல்லை. இலங்கை சரியான வழியில் பயணிக்க வேண்டுமாக இருந்தால் இலங்கையில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதுவே, இலங்கைக்கு நல்லதாகும். இலங்கை ஆட்சியாளர்களுக்கே தீர்மானம் எதிரானது.

அத்துடன், மனித உரிமை பேரவையினால் இலங்கையினை குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல முடியாது. அதற்கான அதிகாரம் மனித உரிமைப் பேரவைக்கு இல்லை.

நாங்கள் போராட்டங்களை நடத்தி, சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தில் பத்துப் பேர் உயிரிழந்திருந்தாலும்கூட மனித உரிமைப் பேரவையினால் அதனைச் செய்யமுடியாது. பாதுகாப்புச் சபைக்கு மட்டுமே குற்றவியல் நீதிமன்றுக்குக் கொண்டுசெல்வதற்கான அதிகாரம் உள்ளது.

இதேவேளை, நாங்கள் கேட்டது, பாரப்படுத்தலுக்கான பொறுப்புக்கூறலுக்கு ஏதுவான காரணியை மனித உரிமைப் பேரவைக்கு வெளியில் கொண்டுசெல்லுங்கள் என்று கோரியிருந்தோம். இப்போது நாங்கள் கேட்டதற்கு அமைவாக அது வெளியே விடப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னைய 30 ஒன்று, 34 ஒன்று, 40 ஒன்று தீர்மானங்களில் கலப்பு நீதிமன்ற முறை சொல்லப்பட்டிருந்தது. இந்தத் தடவை அது சொல்லப்படவில்லை. ஒரு முழுமையான நீதிமன்றப் பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறல் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது” என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...