Main Menu

இந்தியாவை தாக்கும் கொரோனா, 1 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இது வெறும் பலி எண்ணிக்கை மட்டுமல்ல. இந்தியாவில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேரின் சுவாசத்தை கொரோனா பறித்திருக்கிறது எனபதே ஆகும். இந்த மோசமான செய்தியால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என இது அஞ்சப்படுகிறது. கடந்த 204 நாட்களில் இந்தியா இந்த பேரிழப்பை சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கதிகலங்க வைத்துள்ளது. இதுவரை 180-க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 30 அன்று முதல் வைரஸ் இந்தியாவில் பதிவானது, அப்போதிலிருந்து ஊரடங்கு கடைசி நாளான மே 31 வரை அதாவது சுமார் 122 நாட்கள் 1.82 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். அப்போது மொத்தத்தில் 5,405 பேர் உயிரிழந்தனர். பிறகு ஊரடங்கு நீக்கப்பட்ட ஜூன் 1 முதல் அடுத்த 123 நாட்கள் அதாவது அக்டோபர் 2 வரை சுமார் 61.34 லட்சம் புதிய கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளன. அதில் கிட்டத்தட்ட 95 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் ஊரடங்கு நடைமுறையில் இருந்த வரை வைரஸ் தொற்றின் எண்ணிக்கை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருந்தன என்றும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் அதனால் ஏற்பட்ட அலட்சியத்தால் வைரஸ் தொற்று பரவல் பன்மடங்கு அதிகரித்தது என்றும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

தடுப்பூசி வரும்வரை முகக் கவசத்தை தடுப்புசி என்று கருத வேண்டுமென அரசு அறிவுறுத்தியது. ஆனால் அதை யாரும் முறையாக பின்பற்றவில்லை, எந்த சமூக இடைவெளியும் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை, இதனால் கடந்த 123 நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் இறப்பு எண்ணிக்கை 1800 சதவீதம் வேகமாக அதிகரித்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதைத்தொடர்ந்து, அதை கட்டுப்படுத்தும் நோக்கில் பாரதப் பிரதமர் மோடி மார்ச் 22 அன்று பொது ஊரடங்குக்கு உத்தரவிட்டார். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் அதாவது மார்ச் 25 அன்று நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் 68 நாட்கள் தொடர் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு மே 31 அன்று அது முடிவுக்கு வந்தது. இந்நிலையில் 31 வரையிலான புள்ளி விவரங்களை பார்த்தால் ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் சுமார் 8,350 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளன. அதில் நாளொன்றுக்கு சுமார் 193 பேர் மட்டுமே உயிரிழந்தனர். ஆனால் தற்போது கொரோனாவால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகின்றன.

மாநிலங்களை பொருத்தமட்டில், உயிரிழப்பின் எண்ணிக்கையில் மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 37 சதவீதம் பதிவாகி உள்ளது. இதுவரை மகாராஷ்டிரத்தில் 37,056 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் இறப்புகளை பொருத்தவரையில் தமிழகம் 9.50 சதவீதமும், கர்நாடகா 9 சதவீதம் என இரண்டாம் இடமும், மூன்றாவது இடமும் பெற்றுள்ளன. இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் ஆகும். ஆக மொத்தத்தில் உலக அளவில் இதுவரை 3.48 கோடி பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகின்றனர். அதேபோல் இதுவரை உலக அளவில் 10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2.59 கோடி பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். உலகளவில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் இதுவரை மொத்தம் 64 லட்சத்து 73 ஆயிரத்து 544 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 875 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...