இடைக்கால வரவு- செலவுத் திட்டம்: தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று!
இடைக்கால வரவு- செலவுத் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
சென்னை கோட்டையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.
அ.தி.மு.க.வின் 5 வருட கால ஆட்சி, எதிர்வரும் மே மாதம் நிறைவடைய உள்ளமையால், இந்த வருடத்தின் இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தைதான் எதிர்வருகிற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்ய முடியும்.
இதேவேளை சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போது தாக்கல் செய்யப்படவுள்ள வரவு- செலவுத் திட்டத்தில், மக்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த 6 மாத கால இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்களை இடம்பெற செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்கவே அமைச்சரவை கூட்டம் இன்று கூட்டப்படுகிறது.
இந்த கூட்டத்தில் வரவு- செலவுத் திட்டத்துக்கு இறுதி வடிவமும் கொடுக்கப்பட உள்ளது. மேலும் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பின்னர் சட்டசபை வரவு- செலவுத் திட்டக் கூட்டத்தொடரும் நடைபெறலாம் எனவும் கூறப்படுகின்றது.