Main Menu

இங்கிலாந்து இளவரசர் ஹாரி அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக விலகல்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக விலகியதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகை மேகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடி இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெளியேறியது. கடந்த ஆண்டு ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. இது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஹாரியின் தந்தை இளவரசர் சார்லஸ், அவரது சகோதரர் இளவரசர் வில்லியம் ஆகியோருடன் இளவரசர் ஹாரி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இனி இங்கிலாந்து அரச குடும்பத்தின் எந்த அடையாளங்களையும் பயன்படுத்த மாட்டேன் என்று கூறினார்.

அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரி-மேகன் தம்பதி தனியாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் மேகன் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக காதலர் தினத்தின்போது அறிவித்தனர்.

அரச குடும்பத்தில் இருந்து விலகிவிட்டதால் மக்களுக்கான சேவை தொடர்பான கடமைகளை அவர் அரச பரம்பரை என்ற முறையில் செய்யமுடியாது என்று ஹாரியின் பாட்டி 2-ம் எலிசபெத் ராணி தெரிவித்து இருந்தார்.

ஹாரி இங்கிலாந்து அரச குடும்பத்தின் அரியணை வாரிசாக 6-வது இடத்தில் இருக்கிறார். என்றாலும் இவர் அரச குடும்பத்தை விட்டு விலகியது அந்த குடும்பத்தினருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இந்த நிலையில் ஹாரி நிரந்தரமாக அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அரச குடும்பத்திற்கு திரும்பி வரமாட்டோம் என்று இளவரசர் ஹாரியும், மேகனும் எலிசபெத் ராணியிடம் உறுதிப்படுத்தியிருப்பதாக, பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

36 வயதான ஹாரி ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் வீரராக பணிபுரிந்தவர். இதனால் அவருக்கு கடற்படை, விமானப்படை தொடர்பாக பல கவுரவபட்டங்கள் வழங்கப்பட்டன. தற்போது இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக விலகுவதால் இந்த பட்டங்களையும் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக விலகினாலும் இங்கிலாந்திலும், உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளிலும் ஹாரி- மேகன் தம்பதி சேவை செய்வார்கள். இதில் உறுதியாக இருக்கிறார்கள் என்று இந்த தம்பதியரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்கள் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைவரும் சேவை வாழ்க்கை வாழ முடியும். சேவை உலகளாவியது என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...