Main Menu

ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகள் மக்களையே பாதிக்கும் : ரிஷாட் பதியுதீன்

பொருளாதார வீழ்ச்சிக்கான அடிப்படைப் பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டியது அரசின் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறு ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் தேர்ச்சி பெற்றவர்களை ஒன்றுகூட்டி, கலந்தாலோசனை செய்து, பிரச்சினைகளை இனங்கண்டு கொள்ள வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், சுமார் 20 சதவீதமான சிறு ஏற்றுமதியாளர்கள், சிறு கைத்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்தத் துறையில் ஈடுபட்டவர்கள் பல இன்னல்களையும் கஷ்டங்களையும் எதிர்நோக்கினர். தற்போதும் ஆட்சியாளர்கள் செய்யும் தவறுக்காக அவர்கள் அனுபவிக்கின்றனர்.

புதிய ஜனாதிபதி 2048 தொடர்பில் இப்போது கனவு காண்கின்றார். அதனைக் கூறிக்கொண்டு நாம் இருக்கின்றபோது, தொழிற்சாலைகள் இங்கு மூடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைக்கு நிவாரணம் காண்பதை விடுத்து, நீண்டகாலத்துக்குப் பின்னர் நாம் அதனை அடைந்துவிடுவோம் எனப் பேசுவது வியப்பாக உள்ளது. அது மாத்திரமின்றி இவ்வாறான செயற்பாடுகள் நாட்டுக்கு பேரழிவையே ஏற்படுத்தும்.

தற்போது, பாரிய ஆடைத்தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. முதலீட்டாளர்கள் பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் இன்னோரன்ன நாடுகளுக்கு படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அவர்களை தொடர்ந்தும் இந்த நாட்டில் தொழில்களை செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கி, அதற்கான சூழலையும் மனோவலிமையையும் ஏற்படுத்தி உத்தரவாதத்தை வழங்குங்கள்.

தற்போது, இயங்கிக்கொண்டிருக்கின்ற கைத்தொழிற்சாலைகளையாவது தொடர்ந்தும் இயங்குவற்கு முயற்சி செய்யுங்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...