Main Menu

அலெக்சாண்டர் லிட்வினென்கோவின் கொலைக்கு ரஷ்யா பொறுப்பு: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்!

அலெக்ஸாண்டர் லிட்வினென்கோவின் படுகொலைக்கு ரஷ்ய முகவர்கள் பணிக்கப்பட்டதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானிய குடிமகனான முன்னாள் ரஷ்ய உளவாளி, கிரெம்ளின் விமர்சகர் லிட்வினென்கோ, கடந்த 2006ஆம் ஆண்டு லண்டனின் மில்லினியம் ஹோட்டலில் விஷம் கலந்த கிரீன் டீ குடித்து இறந்தார்.

பொலோனியம் -210 விஷத்தால், உயிரிழந்தார். இது அரிய கதிரியக்க பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில், அப்போது நடத்தப்பட்ட பொது விசாரணையில், இந்த கொலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் ‘அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம்’ என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவரது மரணத்தில் எந்த தொடர்பும் இல்லை என்று ரஷ்யா மறுக்கிறது.

இதனைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், முன்னாள் கேஜிபி மெய்க்காப்பாளர் ஆண்ட்ரி லுகோவோய் மற்றும் மற்றொரு ரஷ்யரான டிமிட்ரி கோவ்டூன், கதிரியக்கப் பொருளைத் கிரீன் டீ பானத்தில் கொடுத்ததாக கூறப்பட்டது. எனினும், இவர்கள் இருவரும் இந்த கொலையில் எந்த தொடர்பும் இல்லை என்று மறுக்கின்றனர்.

‘லிட்விநென்கோவுக்கு விஷம் கொடுத்த லுகோவோய் மற்றும் கோவுட்டன் ஆகியோர் ரஷ்ய அரசாங்கத்தின் முகவர்களாக செயற்பட்டனர் என்று ஒரு வலுவான முதன்மை வழக்கு இருப்பதாக நீதிமன்றம் குறிப்பாக கண்டறிந்தது என ஐரோப்பிய நீதிமன்றம் கூறியுள்ளது.

லிட்விநென்கோ விலகுவதற்கு முன்பு ரஷ்ய பாதுகாப்பு சேவைகளில் பணியாற்றினார் மற்றும் பிரித்தானியாவில் தஞ்சம் பெற்றார். அவரது மனைவி மெரினா லிட்வெனென்கோவுடன் சேர்ந்து, அவர் கொல்லப்படுவதற்கு முன்பு அவருக்கு பிரித்தானியா குடியுரிமை வழங்கப்பட்டது.

கிரெம்ளினின் உளவுத்துறையின் முக்கிய விமர்சகராகவும் ஊழலை அம்பலப்படுத்துவதிலும் ஈடுபட்ட லிட்வினென்கோவின் மரணத்திற்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகின்றது.

பகிரவும்...