Main Menu

அரியாலை ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கு ஆளுநர் விசேட அறிவிப்பு!

சுவிட்ஸர்லாந்தில் இருந்து வருகை தந்த மதபோதகருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பபட்டுள்ள நிலையில் இன்று யாழில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், தங்களது விபரங்களை அருகில் உள்ள பொதுச் சுகாதார உத்தியோகத்தருக்குத் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுவிட்ஸர்லாந்தில் இருந்து இம்மாதம் பத்தாம் திகதி காலை சுவிஸ் பிரஜையான மதபோதகர் சிவராஜ்போல் சற்குணராஜா (வயது-61) யாழிற்கு வருகை தந்திருந்தார்.

குறிப்பாக யாழ்ப்பாணம், அரியாலை, கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் விசேட ஆராதனை நிகழ்விலும் வேறு சில நிகழ்வுகளிலும் பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் இம்மாதம் பதினாறாம் திகதி மீண்டும் தனது நாட்டுக்குச்சென்ற பின்னர் அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  தற்பொழுது சுவிட்ஸர்லாந்தின் பேர்ன் நகரில் உள்ள இன்செல்ஸ்பிற்றல் பல்கலைக்கழக வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கான சிகிச்சையினை அவர் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்குறித்த போதகரின் தலைமையில் நடைபெற்ற ஆராதனை நிகழ்வுகளில் பங்கெடுத்த அனைவரும் தங்கள் வீடுகளில் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதுடன் தங்களது விபரங்களை அருகில் உள்ள பொதுச் சுகாதார உத்தியோகத்தருக்குத் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் தங்களுடையதும் தங்களைச் சார்ந்தவர்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மிக அவசியமானது. தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...