Main Menu

அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது

அரசாங்கத்தினால் சிறந்த ஆட்சி நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்­தன்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற அதிருப்தி இலங்கை மக்கள் மத்தியில் காணப்படுவதாக பதவி முடிந்து செல்லும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியிலிருந்து விடைபெறவுள்ள நிலையில் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய அவருடைய இறுதி நேர்காணலிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

சமாதானம் மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்களில் அரசாங்கத்தினால் சில முன்னேற்றகரமான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன எனக் குறிப்பிட்ட அவர், தகவல் அறியும் உரிமையை அடிப்படை உரிமையாக்குவதற்கு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட உயர்ஸ்தானிகர், தற்போதைய நவீன பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். அதனடிப்படையில் தம்மிடமுள்ள புலனாய்வுத் தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளத்தக்க வகையில் நாட்டிற்குள் வெவ்வேறு புலனாய்வு முகவர் நிலையங்களை உள்ளடக்கியதாக ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டமைப்பு மாற்றங்கள் குறித்தும் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு உரிய தருணத்தில் தேர்தல்களை நடத்துவது நாடொன்றின் ஜனநாயக செயற்பாட்டில் முக்கியமான விடயமாகும் எனக் கூறிய ஜேம்ஸ் டோரிஸ், மாகாணசபைத் தேர்தல்கள் தாமதிக்கப்படுகின்றமை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிரவும்...