Main Menu

அரசாங்கத்துக்கு சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

அரசாங்க தகவல் நிலையத்தில் தமிழ் மொழிக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் உடனடியாக அதனை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் முன்னாள் முதலமைச்சரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது,“ கிராமசேவகர் பிரிவுகளை இணையம் வழியாக தொடர்பு கொள்ளுவதற்காக அண்மையில் அரசாங்க தகவல் நிலைய இணையம் வெளியிட்டுள்ள விபரங்களை பார்வையிட்டேன்.

இதன்போது அதில் தமிழர்களின் மாவட்டங்கள், பிரதேசங்கள், கிராமங்கள் மற்றும் தென்னிலங்கையின் தமிழ் பெயர்கள் ஆகியன பெரும்பாலும் எழுத்துப் பிழையுடன் வெளியிடப்பட்டுள்ளமை பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆகவே, இவைகளை உடனடியாக திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் முக்கிய அரசாங்க அலுவலகத்தின் அறிவிப்பு வெளியீடு, இவ்வாறு தமிழ் பிழைகளுடன் வெளியிடப்படுவது  சாதாரண விடயமல்ல.

எனவே இதனைத் திருத்துவதற்கு சரியான வகையில் ஒரு தமிழ் அதிகாரியையோ அல்லது அலுவலரையோ குறித்த அலுவலகம் கொண்டிருக்கவில்லையா என்ற சந்தேகமும் எழுகின்றது.

மேலும் தமிழ் மொழி மீதான மதிப்பற்ற தன்மை, அலட்சியப் போக்கு ஆகியவற்றின் காரணமாகவே இது நடந்திருக்கின்றது என்பதை மாத்திரம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது.

உலக நாடுகள் பலவற்றில் தமிழுக்கு மிக உயரிய மதிப்பு வழங்கப்படுகின்ற போதும் தமிழ் மக்கள் பல ஆயிரம் வருட பூர்வீகத்தை கொண்ட  இந்த நிலத்தில்  தமிழ் மக்களின் தமிழ் மொழி கொலை செய்யப்படுகின்றமை மன உளைச்சலையும் வேதனையையும் தருகின்றது.

அத்துடன் https://gic.gov.lk/gic/index.php/component/findnearest/index.php?option=com_findnearest என்ற இணைத்தளத்தை பார்வையிடுவதன் ஊடாக தமிழ் மொழி எவ்வாறெல்லாம் கொலை செய்யப்பட்டுள்ளது என்பதை அனைவரும் பார்வையிட முடியும்” என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...