Main Menu

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் நிலஅபகரிப்பினை நிறுத்த வேண்டும் – சாணக்கியன்

வடக்கு, கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு உறுதுணையாக இல்லாமல் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். தேசிய பட்டியலில் ஒருவருடன் சேர்த்து ஐவர் இருக்கின்றனர்.

உண்மையிலேயே இந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தினை கொடுக்க வேண்டும். எங்களுடைய வடக்கு, கிழக்கிலே அபிவிருத்தி பணிகளை செய்வதற்கு அவர்கள் முன்வர வேண்டும்.

எங்களுடைய பாரம்பரியமான நிலங்களை அபகரிப்பதற்கு, அதேபோன்று எங்களுடைய மதஸ்தலங்களினுடைய அபகரிப்பு செய்வதனை நிறுத்திவிட்டு உண்மையிலேயே  முழுமையான அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டும்.

உதாரணமாக தொல்பொருள் திணைக்களத்தினால் அன்புமுனை என்று சொல்லப்படும் ஒரு குளம் கூட கிரான் பிரதேசத்திலே இன்று வரைக்கும், அதற்கு நிதி ஒதுக்கப்பட்டும் அதனை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

அதற்குரிய காரணம் தொல்பொருள் திணைக்களத்தினால் அந்த இடத்தினை அவர்களுக்குரிய இடமாக அடையாளப்படுத்தியுள்ளனர். இதன்காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இன்று அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் நபர்கள், இன்று நாடாளுமன்றத்தில் மட்டும் ஒரு ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் இதை கதைக்காமல், உண்மையிலேயே ஜனாதிபதியின் விசேட குழுவிற்கு இரண்டு தமிழர்களையாவது உள்வாங்க வைக்கலாம்.

இதனைப்பற்றி அறிந்த தமிழர்களையாவது உள்வாங்க வைக்கலாம். அதனை விட்டுவிட்டு அபிவிருத்தி என்ற பெயரில் எங்களுடைய நிலஅபகரிப்பினை அவர்கள் நிறுத்த வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...