விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் – நரேந்திர சிங் தோமர்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், விவசாய சட்டங்களை விவசாயிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை ரத்தாகும் பேச்சுக்கே இடமில்லை.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதனால் போராட்டத்தை கைவிட்டு, மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமாக பேச விவசாய அமைப்புகள் முன்வர வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களை மீளப் பெறுமாறு வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 8 மாதகாலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இருப்பினும் குறித்த பேச்சுவார்த்தையில் எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில், போராட்டம் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.