Main Menu

“வரலாற்று சிறப்புமிக்க தலைமை” – ஜோ பைடன் குறித்து கமலா ஹாரிஸ் புகழாரம்

 “ஜோ பைடனின் வரலாற்று சிறப்புமிக்க தலைமைக்கும், நம் நாட்டுக்கான வாழ்நாள் சேவைக்கும் நன்றி. நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்” என்று ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு சிகாகோ நகரத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) தொடங்கியது. வரும் 22ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தார்.

வழக்கமாக மாநாட்டின் கடைசி நாளில்தான் அதிபர் வேட்பாளர்கள் உரையாற்றுவார்கள். ஆனால் இந்த முறை யாரும் எதிர்பாராத வகையில் கமலா ஹாரிஸ் முதல் நாளிலேயே மாநாட்டில் பேசியது கவனம் பெற்றுள்ளது.

இதில் கமலா ஹாரிஸ் பேசியதாவது: “அதிபர் ஜோ பைடனை கொண்டாடுவதன் மூலம் இந்த உரையை நான் தொடங்க விரும்புகிறேன். உங்களுடைய வரலாற்று சிறப்புமிக்க தலைமைக்கும், நம் நாட்டுக்கான உங்கள் வாழ்நாள் சேவைக்கும் நன்றி. நாங்கள் உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.

நம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும், ஒவ்வொரு அடுக்குகளில் இருந்தும் மக்கள் இங்கு குவிந்துள்ளனர். இந்த நவம்பரில் நாங்கள் ஒன்றாக, முன்னேறி வருகிறோம் என்பதை ஒரே குரலில் அறிவிப்போம். நாம் எப்போதும் இதை நினைவில் கொள்வோம்: நாம் போராடினால் வெற்றி பெறுவோம்” இவ்வாறு கமலா ஹாரிஸ் பேசினார்.

இந்த மாநாட்டில் முன்னாள் அதிபர்களான பில் கிளின்டன், பாரக் ஒபாமா ஆகியோர் உரையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.