ராஜஸ்தான் – ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டம் சிபா கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகாமையில் இன்று நண்பகல் பொழுதில் 4 வயது நிரம்பிய பீமா என்ற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் அந்த சிறுவன் தவறி விழுந்துவிட்டான்.
சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை அறிந்த அவனின் பெற்றோர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் புல்டோசர் வாகனங்களின் உதவியுடன் மண்ணை தோண்டி மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 15 அடி ஆழத்தில் இருந்ததாக மீட்பு குழுவினர் தெரிவித்திருந்தனர். மேலும் சிறுவனுக்கு சுவாசிக்க தேவையான ஆக்சிஜன் குழாய் மூலம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பீமா பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
சிறுவனை மீட்ட மீட்புக் குழுவினர் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.