Main Menu

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்

மும்பையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திலிருந்து போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் (Tiger Shroff ) உயிர் தப்பியுள்ளார்.

அவருக்கு எந்தவிதமான துப்பாக்கிக் காயங்களும் ஏற்படவில்லை என்று இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் இந்தியக் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மும்பையின் ஜுஹு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கால்பந்து கழகத்திலிருந்து காரில் வெளியேறிக்கொண்டிருந்த 36 வயதான நடிகரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பல செய்தி ஊடகங்கள் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளன.

அதில், மக்கள் கூட்டத்திற்கு அருகில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்த ஒரு காரின் முன்பக்கப் பயணிகள் இருக்கையை நோக்கி, குறைந்தது இரு துப்பாக்கி ஏந்திய நபர்கள் மிக அருகிலிருந்து பலமுறை சுடுவது பதிவாகியுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஷிராஃபின் சாரதி உட்பட இருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Image

அண்மைய ஆண்டுகளில் நாட்டின் மிக முக்கியமான பொதுப் பிரமுகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வரிசையில், இதுவே மிக அண்மைய சம்பவமாகும்.

2024-ஆம் ஆண்டில், போலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றக்கும்பல் உறுப்பினர்கள் இருவரை இந்தியக் காவல்துறையினர் கைது செய்தனர்.

அதே ஆண்டில், செல்வாக்கு மிக்க இந்திய அரசியல்வாதியான பாபா சித்திக், மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அண்மைய இந்த சம்பவம் இந்தியாவில் பொதுவாழ்வில் உள்ளவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

அண்மைய ஆண்டுகளில் இவர்களில் சிலர் திட்டமிட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்.