Main Menu

ரயிலில் மசாஜ் சேவை அறிமுகப்படுத்த இந்தியன் ரயில்வே முடிவு!

ரயில் பயணங்களில் பல்வேறு சேவைகளை வழங்கி வருமானத்தைப் பெருக்க பல வழிகளில் திட்டங்களை தீட்டிவருகிறது ரயில்வே நிர்வாகம். அந்தவகையில் இப்போது புது வகையிலான ரயில் மசாஜ் சேவை அறிமுகமாகவுள்ளது.

புத்தகம் படிப்பது, ஓய்வெடுப்பது, சில சமயங்களில் அரசியல் மீட்டிங்கூட ரயில்பயணங்களில் நடப்பதை கேள்விப்பட்டிருப்போம்… இப்போது பயணங்களை சொகுசாக்க புது திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது ரயில்வே நிர்வாகம். பயணிகளின் களைப்பை நீக்கவும், அவர்களுக்கு ஓய்வளிக்கவும் இதோ வந்துவிட்டது ரயில் மசாஜ் சேவை. ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ள இந்த புதுவகையான திட்டத்தை மக்கள் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.

கோல்டு, டைமண்ட், பிளாட்டினம் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள மசாஜ்களுக்கு 100 முதல் 300 ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்யும்போதே,  பயணிகளுக்கு தலை மற்றும் பாதங்களில் இந்த மசாஜ் சேவை வழங்கப்படும். மசாஜ் செய்யப்படும் நேரம் சுமார் 10 நிமிடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு ரயிலிலும் 5 மசாஜ் சேவகர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். அவர்களுக்கு ஐ.டி கார்டுகளும் வழங்கப்பட உள்ளன.

டிக்கெட் வருமானத்தைத் தவிர்த்து, ஆக்கபூர்வமாக வருமானத்தை பெருக்கவே  ரயில்வே நிர்வாகம் இந்த மசாஜ் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. முதலாவதாக மத்தியபிரதேச மாநிலம் இந்தோரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் இன்னும் 10 நாள்களில் இச்சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

பயணிகளின் களைப்பைப் போக்கி ரிலாக்ஸாக பயணிக்க உதவும் இந்த ரயில் மசாஜ் திட்டம் மூலமாக ஆண்டுதோறும் 20 லட்ச ரூபாய் கூடுதல் வருமானம் கிடைப்பதோடு,  பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு வரும் வரவேற்பைப் பொறுத்து மற்ற ரயில்வே மண்டலங்களிலும் சேவையை விரிவுபடுத்த இந்தியன் ரயில்வே முடிவெடுத்துள்ளது. கூடிய விரைவில் தமிழக ரயில் பயணிகளும் இந்த ரயில் மசாஜ்-ஐ அனுபவிக்கப்போகிறார்கள்… 

பகிரவும்...
0Shares