ரஜினிக்கு ஆலோசனை வழங்கும் தகுதி அழகிரிக்கு இல்லை- எச்.ராஜா

ரஜினிக்கு ஆலோசனை வழங்கும் தகுதி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இல்லை என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பழனியில் இன்று எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ராகுல் காந்தி, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தலைமையில் இயங்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தான் இனியும் அரசியலில் இருக்க வேண்டுமா? என்பதை யோசிக்க வேண்டும். ரஜினிக்கு அவர் ஆலோசனை வழங்க வேண்டிய தகுதி இல்லை.
அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சிலர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரியது. தமிழகத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்த பலர் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த வழக்கில் இன்றுவரை இறுதிதீர்ப்பு வராததே இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகள் வளர்வதற்கு காரணம். குறிப்பாக சென்னையில் உள்ள மண்ணடி பயங்கரவாதிகளின் கூடாரமாக இருந்து வருகிறது. இது தமிழகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்.
தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாட்டில் உள்ள சிலைகளை மீண்டும் இந்தியா கொண்டுவர முயற்சி செய்யும் அதிகாரி பொன்மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உடனடியாக உதவ வேண்டும். வெளி நாட்டிலுள்ள சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானது என தெரியவில்லை என அமைச்சர் மாபா.பாண்டியராஜன் தெரிவித்திருப்பது, இந்து அறநிலையத்துறை சட்டம் 1958ன்படி 29வது பிரிவு பதிவேடு விதிமுறைப்படி கோவில் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. கோவில் சொத்துக்களை பராமரிக்காத அறநிலையத்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத்துறை சுத்திகரிக்கப்பட வேண்டிய நேரமிது.
மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றுக்கட்சிக்கு போனால் கட்சித் தாவல் தடைச்சட்டம் செல்லாது என்பது கூட தெரியாத சட்டம் படித்த ப.சிதம்பரம் பா.ஜ.க பற்றி பேச தகுதி இல்லை. படித்தவர் என்றாலும், வழக்கறிஞர் என்றாலும் பணம் சேர்ப்பதிலேயே குறிக்கோளாக இருக்கும் ப.சிதம்பரத்திற்கு சட்டம் மறந்து விட்டது. உங்கள் கட்சி உறுப்பினர்களை பாதுகாக்க முடியாத காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வை குற்றம் சாட்டுவது முறையானது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
பகிரவும்...