Main Menu

தமிழக வளர்ச்சிக்கு எதிராக ஸ்டாலின் செயல்படுகிறார் – தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

தமிழக வளர்ச்சிக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு தூய்மையான ஊழலற்ற ஆட்சிக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் காமராஜர். அதனால்தான் மோடி ஊழலற்ற தேசத்தை பேசும்போது காமராஜரை முன்னுதாரணமாக பலமுறை காண்பிக்கிறார்.

தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்கிறது, தமிழ் புறக்கணிக்கப்படுகிறது போன்ற தோற்றத்தை ஸ்டாலினும் அவர்களின் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும் பொய்யாக பிரசாரம் செய்கிறார்கள்.

இதில் எதுவுமே அவர்கள் சொல்வதில் உண்மை இல்லை. எல்லாவற்றிலும் தமிழ் பெருமைப்படுத்தப்படுகிறது. அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது சில நடைமுறைகளை கண்டு கொள்ளாதவர்கள், இன்று ஏதோ மத்திய அரசு வேண்டுமென்றே தமிழை புறக்கணித்தது போன்று பேசுகிறார்கள்.

அஞ்சல் துறை தேர்வு தற்போது நடந்து இருக்கிறது. இதில் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் 2016 வரைக்கும் அது மாநில மொழிகள் இல்லாமல் இந்தி ஆங்கிலத்தில்தான் முதல்நிலை தேர்வு நடந்து இருக்கிறது. பின்னர் மாநில மொழிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு வெளிமாநிலத்தில் இது மல்டிபிள் சாய்ஸ் கேள்வி. இதில் பெரிய ஊழல் நடந்து ஒரு மோசமான முழு சதவீதம் வாங்கி இருக்கின்றனர். இது விசாரணையில் இருந்து வருகிறது.

அதற்கு பின்பு இப்போது அதே நடைமுறையை பின்பற்றுகிறார்கள். இது தெளிவாக பதிவில் கொடுக்கப்பட்டு உள்ளது. இது தமிழகத்திலும் பின்பற்றப்படுகிறது.

நேற்று நடந்த தேர்வில் எல்லாமே தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரெயில்வே துறையில் உள்ள வேலைக்கும் தமிழக வேலைவாய்ப்பில் இருந்தே எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

எனவே ஏதோ இந்தி திணிக்கப்படுகிறது. தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இன்று புதிய கல்விக் கொள்கையை படிப்பதற்காகவும் அதை தெரிந்து கொள்வதற்காகவும் 10 பேர் கொண்ட குழுவை ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இதற்கு முன்னாள் புதிய கல்வி கொள்கை பற்றி அவர் சொன்ன கருத்துக்கள் என்ன? அதை முழுமையாக அறிந்து கொள்ளாமல் தான் கருத்துக்கள் சொன்னாரா?

அப்போது மத்திய பா.ஜ.க. அரசு ஜனநாயக முறைப்படி எல்லோரும் கருத்து சொல்லும் சுதந்திரத்தைக் கொடுத்து அந்தக் கருத்துக்களை சொல்லுங்கள் என்று சொன்ன பிறகும் ஏதோ பொத்தாம் பொதுவான கருத்தைக் கூறி இப்போது கால அவகாசம் கொடுத்த பிறகு குழு அமைத்து இருக்கிறார்கள் என்றால் இதில் உள்நோக்கம் இருக்கிறதா? இல்லையா?

பா.ஜ.க. எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அது விமர்சிக்கப்படுகிறது. அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

முக ஸ்டாலின்

ஸ்டாலினாக இருக்கட்டும், கம்யூனிஸ்டு தலைவர்களாக இருக்கட்டும், விடுதலை சிறுத்தைகளாக கட்டும், வைகோ ஆக இருக்கட்டும் தமிழக வளர்ச்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை நான் பதிவு செய்கிறேன்.

எந்த திட்டம் வந்தாலும் அது பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதை எதிர்ப்பது வாடிக்கையாகி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...