மோடி ஏற்கனவே ஜெயித்து விட்டார் என்ற மாயையில் மயங்கி விடாதீர்கள் – வாரணாசியில் மோடி பேட்டி
வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்த பிரதமர் மோடி, ’மோடி ஏற்கனவே ஜெயித்து விட்டார்’ என்ற மாயை பிரசாரத்தில் மக்கள் மயங்கி விடக்கூடாது என்று வலியுறுத்தினார்.
2014-ம் ஆண்டு வாரணாசி தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனக்கு அடுத்தபடியாக வந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று அதே தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘மோடி ஏற்கனவே வெற்றிபெற்று விட்டார். இனி அவருக்கு யாரும் வாக்களித்து ஆகப்போவது ஏதுமில்லை. எனவே, வாக்களிக்க செல்ல வேண்டாம் என்பது போன்ற ஒரு மாயைச்சூழலை சிலர் உருவாக்கி வருகின்றனர். அதை நம்பி வாரணாசி மக்கள் வாக்களிக்காமல் இருந்துவிட வேண்டாம்.
அவர்களின் மாயை வலையில் தயவுசெய்து நீங்கள் விழுந்துவிட வேண்டாம். வாக்களிக்களிப்பது உங்கள் உரிமை. எனவே, அதை நீங்கள் ஒவ்வொருவரும் சரியாக நிறைவேற்ற வேண்டும்’ என தெரிவித்தார்.