Main Menu

மே 4 ஆம் திகதிக்கு முன்னதாக புதிய பிரதமர் தேர்வு – விரைவில் புதிய அமைச்சரவை

பிரதமர் Jean Castex வரும் நாட்களில் பதவி விலக உள்ள நிலையில், வரும் மே 11 ஆம் திகதி முதல் புதிய பிரதமரின் கீழான அரசு நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எலிசே தரப்பில் இருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றபோதும், வரும் மே 4 ஆம் திகதிக்கு முன்னதாக புதிய பிரதமர் தேர்தெடுக்கப்படுவார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, வரும் மே 11 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து அமைச்சர்கள் கொண்ட அரசு உருவாக்கப்பட்டு விடும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று ஏப்ரல் 28 ஆம் திகதி பிரதமர் Jean Castex தலைமையின் கீழ் ‘அமைச்சரவை’ கூடியிருந்தது. அதன் முடிவில் அரச ஊடக பேச்சாளர் கேப்ரியல் அத்தால் ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார். புதிய அமைச்சரவை தொடர்பாக ஊடகத்தினர் மீண்டும் மீண்டும் கேள்விகளை கேட்ட வண்ணம் இருந்தனர்.

இக்கேள்விகளுக்கு கேப்ரியல் அத்தால் தெரிவிக்கும் போது, ‘இது தான் கடைசி அமைச்சரவைக் கூட்டம் என்றோ, மே 13 ஆம் திகதி ஜனாதிபதியின் பதவிக்காலம் முடியும் போது அமைச்சர்களின் பதவியும் நிறைவுக்கு வரும் என்றோ நான் உறுதியளிக்கவில்லை!” என மிக பூடகமான பதில் ஒன்றை வெளியிட்டார்.