மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் : வடக்கில் பல இடங்களில் நடத்த தடை
தமிழர்களின் உரிமைப் பேராட்டத்தில் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பிக்கிறது.
சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்றைய தினம் (21) ஆரம்பிக்கவுள்ள மாவீரர் தின நினைவேந்தல் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்படவுள்ளது.
தாயகப் பகுதியில் மாவீரர் தின அனுஷ்டிப்புக்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளனர்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்தத் தடை உத்தரவு ஏற்கனவே பெறப்பட்டுள்ள நிலையில் இன்று மாவீரர் வாரம் ஆரம்பமாகின்றது.
இதேவேளை, கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண காவல்துறை அதிகார பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னதாக, முல்லைத்தீவு, முள்ளியவளை, மற்றும் வவுனியா காவல்துறை பிரிவுகளிலும், சிலருக்கு மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.