மலர்ந்திருக்கும் பிலவ புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் கோவில்களில் விசேட பூஜை வழிபாடுகள்!
மலர்ந்திருக்கும் பிலவ புத்தாண்டை முன்னிட்டு, இன்று(புதன்கிழமை) நாடளாவிய ரீதியாக உள்ள கோவில்களில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
சித்திரை வருட புத்தாண்டு நாளான இன்றைய தினம் நல்லூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகைத் தந்து, பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
மேலும், சுபவேளையில் மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடத்தப்பட்டதோடு, நல்லூர் கந்தன் உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் காட்சியும் அளித்தார்.
தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த சிறப்பு வழிபாட்டின் போது நாட்டில் நீண்ட சாந்தியும் சமாதானமும் நிலவும், கொரோனா அச்சுறுத்தல் நீங்கவும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதேநேரம், தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நேற்று இரவு சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
பிலவு வருடப்பிறப்பில் மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்த பக்தர்களும் மருத்துநீர் தேய்த்து வழிபாடுகளை முன்னெடுத்தனர்.
அத்தோடு, புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களுக்கு கைவிசேடம் வழங்கப்பட்டதுடன் ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.