மதத்துக்காக சாகப் போவதாக கூறினார் சஹ்ரான் – மனைவி பாத்திமா
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமாவும், கடுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய மொகமட் ஹஸ்துனின் மனைவி சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரனுமே, ஏப்ரல் 19ஆம் நாள், கிரிஉல்லவில் உள்ள ஆடையகத்தில் ஒன்பது வெண்ணிய மேற்சட்டை மற்றும் பாவாடைகளை வாங்கியுள்ளனர்.
சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயமடைந்த நிலையில் அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சஹ்ரானின் மனைவி பாத்திமா இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது மேலும் பல தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
“எதிர்காலத்தில் தேவை என்பதாலேயே அதனை வாங்கியதாகவும், அந்த ஆடைகள் மற்றும் ஏனைய பொருட்கள் ஏன் வாங்கப்பட்டன என்று பின்னர் தெரியவரும் என்றும் சாரா என்னிடம் கூறினார்.
எதற்காக வெண்ணிற ஆடைகள் வாங்கப்பட்டன என்பது சாராவுக்கு மட்டும் தான் தெரியும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும் சாரா, ஏப்ரல் 26ஆம் நாள் சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டு விட்டார்.
மதத்துக்காக உயிரைக் கொடுக்கப் போவதாக தனது கணவன் சஹ்ரான் கூறினார் என்றும் எனினும், அது தற்கொலைத் தாக்குதலாக இருக்கும் என்று தனக்குத் தெரியாது என்றும் பாத்திமா தெரிவித்துள்ளார்.
கடைசியாக ஏப்ரல் 19ஆம் நாள், சஹ்ரானை பார்த்ததாகவும், இன்று சம்மாந்துறைக்குத் திரும்பும் போதே, வெண்ணிற ஆடைகளை வாங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
“ஒரு பையில் சஹ்ரான் என்னிடம் பணத்தைக் கொடுத்தார். அந்த பையில் எவ்வளவு பணம் இருந்தது என்று எனக்குத் தெரியாது, அந்தப் பையில் இருந்து எடுத்த பணத்தில் தான், சம்மாந்துறைக்குச் சென்ற வாகன கட்டணத்தைக் கொடுத்ததுடன், 29 ஆயிரம் ரூபாவுக்கு உடைகளையும் வாங்கியிருந்தேன்.” என்றும் பாத்திமா தெரிவித்துள்ளார்.
குண்டுவெடித்த வீட்டில் இருந்து 9 இலட்சம் ரூபாவைக் கைப்பற்றியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தான், வத்தளை, கொள்ளுப்பிட்டி, கல்கிசை, பாணந்துறை, கட்டான என பல்வேறு இடங்களி்ல் வசித்ததாகவும், ஏப்ரல் 20 தொடக்கம் 26 வரை நிந்தவூரில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்ததாகவும், பாத்திமா தெரிவித்துள்ளார்.
காவல்துறை தேடுதல் நடத்தும் என்ற அச்சத்தில் ஏப்ரல் 26ஆம் நாள் அந்த வீட்டில் இருந்து வெளியேறி, வான் ஒன்றில் சஹ்ரானின் இரண்டு சகோதரர்கள், சகோதரி, அவரது கணவன், பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன், சாய்ந்தமருது வந்ததாகவும், அங்கு வந்து சற்று நேரத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாகவும் அவர் விசாரணைகளில் கூறியுள்ளார்.