Main Menu

குண்டைப் பொருத்தி விட்டு தப்பினார் சஹ்ரான்? – புலனாய்வு அமைப்புகள் சந்தேகம்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், ஷங்ரி-லா விடுதி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள புலனாய்வு அமைப்புகள், அவர் உயிருடன் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஷங்ரி-லா விடுதி தற்கொலைக் குண்டுவெடிப்பில் உயிரிழந்தாரா என்பது  தொடர்பாக,  புலனாய்வு அமைப்புகள் இன்னமும் சந்தேகம் கொண்டுள்ளன.

இந்த தாக்குதலுக்காக தற்கொலைக் குண்டுதாரி ஒருவருடன் சஹ்ரான் ஷங்ரி-லா விடுதிக்கு வந்தார் என்றும், ஆனால், சஹ்ரான் குண்டைவெடிக்க வைத்து தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.

அவர், நேரக் கணிப்பு குண்டைப் பொருத்தி விட்டு, அல்லது தொலைக்கட்டுப்பாட்டு கருவி மூலம் குண்டை வெடிக்கச் செய்து விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரியின் படத்துக்கும், சஹ்ரானின் படத்துக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதி செய்வதற்கு மரபணுச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை நிறுவிய சஹ்ரான், ஐஎஸ் அமைப்பின் ஆதரவைப் பெற்று, தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு பயிற்சிகளை அளிக்க கடுமையாக உழைத்திருந்தார்.

அவர், தமது அமைப்பின் இரண்டாவது தலைவராக யாரையும பெயரிடவில்லை என்றும் அறியப்படுகிறது.

தற்கொலைக் குண்டுதாரியாக அவர் சாவைத் தழுவியிருந்தால், அவரது அமைப்பின் செயற்பாடுகள் சாத்தியமற்றதாகி விடும்.

எனவே தான், சஹ்ரான் இன்னமும் உயிருடன் இருக்கலாம் என்று புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன.

அவர் மறைவாக இருந்து கொண்டு தீவிரவாதச் செயல்களில் அல்லது ஏனைய வழிகளில் தாக்குதல்களில்  ஈடுபடக் கூடும் என்றும்  புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் எழுப்பியுள்ளன.

பகிரவும்...