பொள்ளாச்சியில் 20 ஆண்டுகள் சிகிச்சை அளித்த 2 போலி டாக்டர்கள் சிறையில் அடைப்பு
பொள்ளாச்சியில் 20 ஆண்டுகள் சிகிச்சை அளித்த வந்த இரண்டு போலி மருத்துவர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டது பொதுமக்களிடம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியில் பத்ரா (50) என்பவர் பத்மா கிளீனிக் என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். இவர் மூலம், பிரஸ்சர் மற்றும் தோல் நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
இவரது ஆஸ்பத்திரியில் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த சிரஞ்சீத் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் மூல நோய்க்கு சிகிச்சை பெற வந்தார். அவரிடம் ரூ.20 ஆயிரம் பெற்று கொண்டு பத்ரா சிகிச்சை அளித்துள்ளார். பின்னர் சிரஞ்சீத் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
சிகிச்சைக்கு பின் அவரின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் சிரஞ்சீத் உறவினரான டாக்டர் ஜானிக்குமார் பிஸ்வால் என்பவர் கோவை வந்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனரிடம் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட ஆயுஷ் மருத்துவ அலுவலர் பாஸ்கரன், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ராஜா, பொள்ளாச்சி வடக்கு வருவாய் ஆய்வாளர் பட்டுராஜா ஆகியோர் நாச்சி கவுண்டர் வீதியில் பத்மா என்ற பெயரில் பத்ரா நடத்தி வரும் கிளினிக்குக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது பத்ரா மருத்துவம் படித்ததற்காக எந்தவித ஆவணங்களும் இல்லை.
அவர் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு கடந்த 20 ஆண்டுகளாக டாக்டராக பணியாற்றி சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட ஆயுஷ் மருத்துவ அலுவலர் பாஸ்கரன் கொடுத்த புகாரின் போலீசார் போலி டாக்டர் பத்ராவை கைது செய்தனர்.
இதைதொடர்ந்து அவர் நடத்தி வந்த கிளினிக்குக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
இதேபோல் பொள்ளாச்சி திருநீலக்கண்டர் வீதியில், ராமச்சந்திரன் (58) என்பவர் கிட்னி மற்றும் கேன்சர் ஆராய்ச்சி மையம் என்னும் பெயரில் கிளினிக் நடத்தி வருகிறார். அவரது கிளினிக்கிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் ராமச்சந்திரன் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு ஆயுர்வேத சித்தவர்ம குருகுல வைத்தியம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
மேலும் தன்னை பாரம்பரிய மருத்துவர் என கூறி வந்துள்ளார். சுகாதார துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவரின் கிளினிக்கில் காலாவதியான மருந்துகள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொள்ளாச்சி வட்ட பதிணென் சித்தர் சித்த மருத்துவ சங்கத்தில் உறுப்பினர் என்றும் அங்கு தான் மருத்துவம் கற்றதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். மருத்துவப்படிப்புக்கான முறையான ஆவணங்கள் இல்லாததாலும் காலாவதியான மருந்துகளை விற்பனைக்கு வைத்திருந்த காரணத்தாலும் வருவாய் துறையினர் கிளினிகிற்கு சீல் வைத்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.
அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்த போது அங்கு வந்த வேலாயுதம் என்பவர் தான் ஒரு ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் என்றும் பொள்ளாச்சி பதிணென் சித்த மருத்துவ சங்கத்தின் தலைவர் என்றும் தெரிவித்தார். அவரிடம் சுகாதார துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 2 போலி டாக்டர்களையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சியில் ஒரே நாளில் இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டது பொதுமக்களிடம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.