பொது தேர்தலையொட்டி தினமும் பத்து லட்சம் அக்கவுண்ட்களை நீக்கும் ஃபேஸ்புக்
இந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து தினமும் பத்து லட்சம் போலி அக்கவுண்ட்களை நீக்கி வருதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் வழிமுறைகளை பயன்படுத்தி ஃபேஸ்புக்கில் இயங்கி வந்த சுமார் பத்து லட்சம் போலி அக்கவுண்ட்கள் தினசரி அடிப்படையில் நீக்கப்படுவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி ஃபேஸ்புக்கில் சந்தேகிக்கக்கூடிய நடவடிக்கைகள் நிறைந்த அக்கவுண்ட்கள் நீக்கம் மற்றும் முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் தெரிவித்திருக்கிறது.
இந்திய பொது தேர்தலில் நேர்மையை காக்க உள்ளூர் நிறுவனங்கள், அரசு குழுக்கள் மற்றும் வல்லுநர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என ஃபேஸ்புக் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் துணை தலைவர் அஜித் மோகன் தனது வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இந்திய தேர்தல் நேர்மையாகவும், இடையூறின்றி நடைபெறுவதற்கு கிட்டத்தட்ட 18 மாதங்களாக பணியாற்றி வருகிறோம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் இந்தியா மட்டிமின்றி உலகம் முழுக்க பல்வேறு குழுக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் அரசியல் விளம்பரங்களை பொதுப்படையாக்க புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது. இதன் மூலம் அரசியல் விளம்பரங்களை பயனர்கள் மிக எளிதாக கண்டறிந்து விட முடியும். இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் இருபுதிய வசதிகளை சேர்த்தது.
இவற்றை கொண்டு பயனர்கள் தங்களது வேட்பாளர்களை பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடியும். இத்துடன் வாக்கு செலுத்தியதும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக வாக்கு செலுத்தியதை பகிர்ந்து கொள்ளலாம். கடந்த வாரம் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனம் விதிகளை மீறியதாக கிட்டத்தட்ட 700 பக்கங்கள், குரூப்கள் மற்று்ம அக்கவுண்ட்களை நீக்கியதாக தெரிவித்துள்ளது.