பெலரஸ்ஸில் எதிர்க்கட்சியின் போராட்டங்களுக்கான தலைவி கடத்தப்பட்டார்!
பெலரஸ்ஸின் எதிர்க்கட்சி போராட்டங்களுக்கான தலைவி மரியா கொலெஸ்னிகோவா (Maria Kolesnikova) இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
ஓகஸ்ட் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் 633 அரசாங்க எதிர்ப்பாளர்களை பாதுகாப்புப் படையினர் கைதுசெய்த சில மணி நேரங்களிலேயே இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளது.
முகமூடி அணிந்த நபர்கள் இவ்வாறு அவரை வான் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, கொலெஸ்னிகோவா கைது செய்யப்படவில்லை என மின்ஸ்கில் பொலிஸார் தெரிவித்ததாக ரஷ்யாவின் இன்டர்ஃபக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோவியத் ஒன்றியத்திலிருந்து பெலரஸ் பிரிந்தது முதல் அந்த நாட்டை 26 ஆண்டுகளாக ஆண்டுவரும் சர்வாதிகார ஆட்சியாளர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ, அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 80 வீத வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றதாக பெலரஸின் மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வாக்கு கணிப்புகளின் அடிப்படையில், இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் ஸ்வெட்லானா ஷிகானோஸ்கயாவுக்கு வெறும் 10 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து, இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதாக நடுநிலையாளர்களும், எதிர்க் கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டில் நான்கு வாரங்களுக்கு மேலாக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பின்னணியிலேயே அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு்த தலைமைதாங்கும் கொலெஸ்னிகோவா கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.