புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றனர்- பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்பதால் இந்த கூட்ட தொடருக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக கடந்த 7-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நேற்று கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்தநிலையில் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி சபையை நடத்தினார்.
சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வெற்றிச் சான்றிதழ்களுடன் வந்திருந்தனர்.
முதலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் அமைச்சர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதன்பிறகு எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் உறுதிமொழி ஏற்றனர். அகர வரிசைப்படி புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கொரோனா பரவல் காரணமாக தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கில் சட்டசபை கூட்டம் நடத்தப்படவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது கலைவாணர் அரங்கத்தை தேர்வு செய்து சட்டசபை கூட்டத்தை நடத்தினார்கள்.
அதனை பின்பற்றி 16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடரும் கலைவாணர் அரங்கிலேயே இன்று தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கலைவாணர் அரங்கில் 3-வது மாடியில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.
கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவருமே முககவசம் அணிந்து சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இன்று புதிய எம்.எல்.ஏ.க் கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலும் நடத்தப்படுகிறது. சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.
நாளை நடைபெறும் கூட்டத்தில் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் சபாநாயகரை அவரது இருக்கையில் அமர வைப்பார்கள்.
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்பதால் இந்த கூட்ட தொடருக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாளை புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பிறகு எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்கிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பது பற்றியும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள அ.தி.மு.க. இது தொடர்பான கோரிக்கைகளை காரசாரமாக எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய சட்டசபை கூட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோரை தவிர அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.
சட்டசபை கூட்டத்தொடரை அடுத்து கலைவாணர் அரங்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரங்க வளாகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.
அடையாள அட்டை இருந்தவர்கள் தவிர வேறு யாரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. கலைவாணர் அரங்கத்தை சுற்றியும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.