பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை
பாடசாலைகளின் பாதுகாப்பு உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் விடயத்தில் எதுவித அச்சத்தையும் பெற்றோர் கொள்ளத்தேவையில்லை என்று கல்வி அமைச்சர் அகிரவிராஜ் காரியவசம் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், படைத் தரப்பின் மீது நம்பிக்கை வைத்தே நாம் நாட்டில் பாதுகாப்பு உள்ளதென்ற தீர்மானத்தை எட்டினோம். என்று குறிப்பிட்ட அமைச்சர் , பாதுகாப்புப் படைகள் உத்தரவாதம் வழங்கியிருக்காவிட்டால், ஆறு மாதங்கள் வரையேனும் பாடசாலைகளை திருக்காமல் இருந்திருப்போம் என்றும் கூறினார்.
படைத்தரப்பு மாத்திரமன்றி, பொலிசாரும், உத்தரவாதம் வழங்கினார்கள். நாம் பொறுப்புள்ள அரசியல்வாதிகளாக, இலங்கையில் வாழும் 45 இலட்சம் வரையிலான பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியம் .பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்காக பாடசாலைகளில் சிசி ரிவி கமராக்களை பொருத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை நடைபெறும். எனினும் இதற்காக பெற்றோர்களிடம் இருந்த பணம் அறவிடப்பட மாட்டாதென அவர் வலியுறத்தினார்.
தேசிய பாடசாலைகள் நிலையத்தில் இருந்து இதற்குத் தேவையான பணம் ஒதுக்கப்படும். கடந்த காலங்களில் பாடசாலை மூடப்பட்டதால், பின்னடைவு ஏற்பட்டுள்ள பாடங்களை பூர்த்தி செய்வதற்கு காலம் தேவையானால் சனிக்கிழமை தினங்களில் வகுப்புக்களை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாத விடுமுறை காலத்தின் நாட்களை குறைப்பது மற்றுமொரு எதிர்பார்ப்பாகும் என்றும் கல்வி அமைச்சர் அகிரவிராஜ் காரியவசம் மெலும் தெரிவித்தார்;.