Main Menu

பிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல்

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் பிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற 12-ந் தேதியுடன் முடிகிறது. இது சாத்தியமானால் பிரிட்டனில் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

எனவே இதனை தவிர்க்கும் விதமாக ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த வலியுறுத்தி பிரிட்டன் பாராளுமன்றத்தின் கீழ்சபையில் எதிர்க்கட்சியினர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மசோதா அங்கு ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேறியது.

அதனை தொடர்ந்து அந்த மசோதா மேல்சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கும் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது. அதன் பின்னர் அந்த மசோதா ராணி எலிசபெத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவர் இந்த மசோதாவில் கையெழுத்திட்டார். இதையடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதை தடுக்கும் நடவடிக்கை சட்டமானது.

அதாவது இனி பிரிட்டன் ஒப்பந்தத்துடன் மட்டுமே ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடியும். இதற்காக பிரதமர் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க ஒப்புதல் பெற வேண்டும்.