Main Menu

பிரபல திரைப்படப் பாடலாசிரியரும், முன்னாள் அரசவைக் கவிஞருமான புலமைப்பித்தன் அவர்களுக்கு இதய அஞ்சலி

பிரபல திரைப்படப் பாடலாசிரியரும், முன்னாள் அரசவைக் கவிஞருமான புலமைப்பித்தன் அவர்கள் காலமானார். கோவை மாவட்டம் பள்ளப் பாளையத்தில் 1935ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் திகதி பிறந்தார். இவரது இயற்பெயர் இராமசாமி (கருப்பனதேவர் ) மனைவி தமிழரசி. பிள்ளைகள் புகழேந்தி கண்ணகி. இவரது பேரன் திலீபன் நடிகராக வத்திக்குச்சி திரைப்படத்தில் அறிமுகமாகியது குறிப்பிடத்தக்கது. நூற்பாலையில் பணிபுரிந்தபடியே தமிழ் புலவர் படிப்பை நிறைவு செய்தார்.தன்மான உணர்வும், தமிழ் இன பற்றும், ஈழ விடுதலைக்காக தணியாத தாகமும் கொண்ட புலவர் புலமைப்பித்தன் 1964ல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார்.சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.
குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இடம்பெற்ற நான் யார் நீ யார் என்ற பாடல் மூலமாக திரையுலகில் நுழைந்தார். அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா பாடல் மூலம் அனைத்து இரசிகர் இதயத்திலும் இடம் பிடித்தார்.
முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் அன்புக்கும் பாத்திரமானவர். தமிழக சட்ட சபையின் துணைத்தலைவராக பணியாற்றினார். அரசவைக்கவிஞராகவும் நியமிக்கப்பட்டார்.

புரட்சித்தலைவர் பற்றி அவர் பகிர்ந்த ஒரு விஷயம் மிக மிக சுவாரஸ்யமானது!! சுவையானது!! எம்.ஜி.ஆர் என்னும் சகாப்தத்தில் இன்னும் எத்தனை பக்கங்கள் என்கிற கேள்வியை எழ வைக்கக்கூடியது!

சைதை மாந்தோப்பு பள்ளியில் தமிழ் வாத்தியாராகப் பணிபுரிந்துவந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களை நான் யார் … நான் யார் என்கிற பாடல் வழியே திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைத்த புரட்சித்தலைவர் … புலவரின் தமிழுக்குத் தலைவணங்கி … அவருக்குத் தான் நடிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு தந்து வந்தது வழக்கமானது! அவற்றைத் தாண்டி … தமிழ்நாடு அரசின் சட்டமன்ற மேல்சபையின் உறுப்பினராய் பொறுப்பேற்கச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

அந்தப் பதவியின் போது கன்னிப்பேச்சு வழங்கினார் புலவர் புலமைப்பித்தன். அச்சமயம் தன் வாழ்க்கையை உயர்த்தி வைத்த வள்ளலுக்கு வாயாரப் புகழுரைகள் சாற்றிட எண்ணியிருந்தார். தமிழகத்தின் முதலமைச்சராய் பொறுப்பேற்றிருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் புலவரின் கன்னிப்பேச்சை நேரடியாய் பங்கேற்று சிறப்பிக்க விரும்பினாலும், புலவரின் உணர்ச்சிப்பெருக்கில் வார்த்தைகள் இடம்பெயரும் என்பதை உணர்ந்த தனது அறையில் பிரத்தியேக ஏற்பாட்டின்படி புலமைப்பித்தனின் பதவியேற்பையும் அவர்தம் கன்னிப்பேச்சையும் கேட்டார். வருவார் வள்ளல் என்று காத்திருந்த புலவர் கடைசி நேரத்தில் மத்திய அரசிடம் தொலைபேசியில் தலைவர் அவசரப்பணியில் இருப்பதாகச் செய்தியறிந்து தனது முதல் உரையை சட்டமன்ற மேலவையில் வழங்கினார்.

புலமையும் திறமையும் இணைந்திருந்த புலமைப்பித்தன் தன் நன்றியறிதலை புகழ்வாய்ந்த தமிழ்நாடு சட்டமன்றத்தில் … மேலவையில் … ஆற்றிய உரை உணர்வுப் பூர்வமானது!! உள்ள பூர்வமானது! புரட்சித்தலைவரைப் பற்றி என்ன சொல்லலாம் … தாய் என்பதா? தந்தை என்பதா? வழிகாட்டி என்பதா? நண்பர் என்பதா? உற்றதொரு துணைவர் என்பதா? உள்ளம் தழுதழுக்க … ஒருவழியாக புதிய பாணியில் அவர் சொன்ன வரி இதோ …

நான் கால் வைத்த இடமெல்லாம் தன் கைவைத்து என்னை உயர்த்தியவன் …

நன்றியை இதைவிடவா எடுத்துரைக்க முடியும்? நற்றமிழ் துணைபுரிய புத்தம் புதிய வார்த்தைப் பதங்களை பொருத்தமாய் பதித்த தமிழ்ப் புலவனின் கன்னியுரை மக்கள் திலகத்தின் கண்களில் ஒருசிலத் துளிகளை வரவேற்றிருக்குமே!!

குடியிருந்த கோயிலுக்காக … திரைப்பாடல் எழுத முதன்முதலில் புலவருக்கு வாய்ப்பு வழங்கப்பட … இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர் … அதில் மனநிலை பாதித்த பாத்திரம் ஏற்றிருந்த கதாநாயகன் பாடுவதாக அமையும் பாடல்! முதல் பாடலே முற்றிலும் புதிய சூழலுக்காக … எழுதப்பட வேண்டியிருந்தது. அதையும் சவாலாக ஏற்று … தத்துவ முத்திரைகள் பதித்திட புரட்சித்தலைவருக்கு மிகவும் பிடித்துப்போனது! அரிய கருத்துக்களை அள்ளி வழங்கி … புதிய திரைப்படப் பாடலாசிரியரின் வருகையைப் பதிவு செய்த பாடலாகவும் அமைந்தது!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும் புரட்சித் தலைவர் என்று பெயர் பெற்றவருமான நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற எம்ஜிஆர் தமிழ் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத சக்தியாக நிலை நின்றவர். காலத்தை தாண்டி இன்றும் எம்ஜிஆர் பாடல்கள் உழைப்பாளர்களால் கேட்கப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாதது.

இதற்கு ஒரு முக்கிய காரணம் எம்ஜிஆர் திரைப் படங்களின் பாடல்களை எழுதிய பாடலாசிரியர்கள். அவர்கள் முக்கியமான பாடலாசிரியர் புலமைப்பித்தன். கவிஞர் புலமைப்பித்தன் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்காக எழுதிய ‘சிரித்து வாழ வேண்டும்.. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ என்கிற பாடல் மிகவும் பிரபலம்.

பட்டிதொட்டியெல்லாம் பரவி மிகப்பெரிய வெற்றிப் பாடலாக வெகுஜன மக்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பாடல் எம்ஜிஆருக்கு முக்கியமான பாடலாக அமைந்தது. இதேபோல் ‘நான் யார்.. நான் யார்..’ பாடல், ‘ஓடி ஓடி உழைக்கணும்’.. ‘ஆயிரம் நிலவே வா..’ என்கிற பாடல் உள்ளிட்ட பல பாடல்களை புலமைப்பித்தன் எழுதினார்.

எம்ஜிஆர் காலத்தை அடுத்து பல திரைப்பட பாடல்களை எழுதிய புலமைப்பித்தன் வடிவேலு நடித்து வெளியான இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, தெனாலிராமன் உள்ளிட்ட திரைப்படங்கள் வரையிலும் எண்ணற்ற பாடல்களை எழுதியிருக்கிறார்.

இலக்கிய சுவையும் உயரிய தத்துவங்களையும் பாடல்களாக தந்து விட்டு கண் மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களை எமது தமிழ் ஒலி வானொலி சார்பில் காலம் உள்ளவரை தமிழுக்கான காவல் தெய்வமாக பூஜித்து கண்ணீர் பூக்களை காணிக்கையாக செலுத்துவோம்!

பகிரவும்...